பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 600 கி.மீ. கடல் சுவர் கட்டும் இந்தோனீசியா

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள 600 கி.மீ. கடல் சுவர் கட்டும் இந்தோனீசியா

2 mins read
6ab2f372-1625-4f87-bcbf-3dce5300dbf2
2025ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, ஜகார்த்தாவில் மேற்கு அன்கோல் வட்டாரத்தின் கடற்கரைப் பகுதியில் பேரளவில் சுவர் கட்டும் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள். - படம்: அந்தாரா செய்தி நிறுவனம்

ஜகார்த்தா: ஜாவாவின் வடக்குக் கடற்கரைப் பகுதி நெடுகிலும் பேரளவில் சுவர் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை இந்தோனீசிய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம், உயரும் கடல் மட்டம் ஆகிய அச்சுறுத்தல்களிலிருந்து உத்திபூர்வப் பொருளியல் நிலையங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை அந்நாடு விரைவுபடுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அத்திட்டம் வெறும் கடலுக்கு அருகே இருக்கும் நிலப் பகுதிகளைப் பாதுகாக்கச் சுவர் எழுப்பும் பணி மட்டுமன்று, பொருளியல், கடலோரப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டம் என இந்தோனீசிய உள்கட்டமைப்பு, வட்டார மேம்பாட்டு ஒருங்கிணைப்பு அமைச்சர் அகஸ் ஹரிமூர்த்தி யுதோயோனோ தெரிவித்தார்.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின்கீழ், வடமேற்கு ஜாவாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில்துறை வளாகங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கத் தேசிய உத்திபூர்வ முன்னுரிமையாகக் இத்திட்டம் கருதப்படுகிறது.

திட்ட வரைவின்படி, 575 கிலோமீட்டர் நீளமுடைய இந்தக் கடல் சுவர் 15 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, படிப்படியாகக் கட்டப்படவுள்ளது.

பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதால், அதற்கு உகந்த உள்கட்டமைப்புகளை உருவாக்குவது நீடித்த நிலைத்தன்மை கொண்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என அமைச்சர் அகஸ் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளை வட ஜாவா கடலோர நிர்வாக ஆணையம் மேற்கொள்ளவுள்ளது. கட்டுமானத்தின்போது உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட கடலோரச் சமூகங்களின் வாழ்வாதாரமும் சுற்றுச்சூழல் கூறுகளும் கவனத்தில் கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தை வெறும் கடலோரப் பாதுகாப்போடு நிறுத்தாமல், புதிய பொருளியல் வளர்ச்சி நிலையங்களை உருவாக்கி, முதலீடுகளை ஈர்க்கும் ஒரு தளமாக விரிவுபடுத்த பரிசீலித்து வருவதாக அமைச்சர் ரோஷன் ரோஸ்லானி குறிப்பிட்டார்.

ஜாவாவின் வடக்குக் கடற்கரைப் பகுதி தற்போது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 465.17 பில்லியன் வெள்ளி பங்களிப்பை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்