கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்பும் ஜோகூர் நீர் விநியோகம்

2 mins read
d558dfc5-21d2-4891-b7d2-8f000e7bf8a1
ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக நீர் விநியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. - படம்: பெர்னாமா

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூரில் நீர் விநியோகம் கட்டங்கட்டமாக வழக்கநிலைக்குத் திரும்புவதாக மாநிலத்தின் நீர் விநியோக நிறுவனம் ரன்ஹில் எஸ்ஏஜே தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பல்வேறு சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட நீர் மாசு காரணமாக ஜோகூரில் நீர் விநியோகம் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டது. நவம்பர் 2ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி அது 81 விழுக்காடு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாக ரன்ஹில் நிறுவனம் சொன்னது.

சினாய், சீலோங், புக்கிட் இன்டா, கோத்தா திங்கி, பொந்தியான் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாகத் திரும்பிவிட்டது.

கூலாயில் 85 விழுக்காடு, கெம்பாஸ், தெப்ராவ் ஆகியவற்றில் 75 விழுக்காடு, ஸ்கூடாயில் 64 விழுக்காடு என ஒரு சில இடங்களில் கட்டங்கட்டமாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக பல்வேறு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் பாதிக்கப்பட்டதை அடுத்து 800,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

மக்கள் தொடர்ந்து நீரைப் பெற்றுக்கொள்ள வகை செய்யும் விதத்தில் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகம் செய்யும் முயற்சி தொடர்கிறது என்று ரன்ஹில் நிறுவனம் குறிப்பிட்டது.

பல்வேறு இடங்களில் தண்ணீர் லாரிகளில் மக்கள் நீரைப் பெற்றுக்கொண்டனர்.
பல்வேறு இடங்களில் தண்ணீர் லாரிகளில் மக்கள் நீரைப் பெற்றுக்கொண்டனர். - படம்: த ஸ்டார்

தண்ணீர் லாரிகளில் நீரைப் பெறும் பயனீட்டாளர்கள் போதுமான அளவு பிடித்துவைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

கோத்தா திங்கியில் உள்ள மணல் சுரங்கத் தளத்தில் உள்ள ஆறாவது சுத்திகரிப்புக் குளம் உடைந்ததை அடுத்து சுத்திகரிக்கப்படாத நீர் ஜோகூர் ஆற்றில் கலந்ததாகத் தொடக்கக் கட்ட ஆய்வில் தெரியவந்தது.

ஆற்றுநீர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கலங்கலாக இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அதன் விளைவாக லிங்குய் அணையிலிருந்து உடனடியாகக் கூடுதல் நீர் திறந்துவிடப்பட்டது.

லிங்குய், செமாங்கார், சுங்காய் ஜோகூர், சிங்கப்பூர் தேசிய நீர் அமைப்பான பியுபி நீர்ச் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை பாதிக்கப்பட்டன.

கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, பொந்தியான், கூலாய் ஆகியவற்றில் உள்ள நீர் விநியோகம் தடைபட்டது.

குறிப்புச் சொற்கள்