பேங்காக்: ஓய்வுக்காலத்திற்குத் தேவையான பணம் சேமிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியாகப் புதுவகை பரிசுச்சீட்டுக் குலுக்கல் முறைக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, ஓய்வுக்காலப் பரிசுச்சீட்டிற்காக அவர்கள் 60 வயதை எட்டிய பிறகே அவருக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று துணை நிதியமைச்சர் பாவ்பூம் ரோஜனசக்குல் தெரிவித்தார்.
அதற்காக தேசிய சேமிப்பு நிதியில் திருத்தம் செய்ய மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தபின் அந்நிதி மூலம் ஓய்வுக்காலப் பரிசுச்சீட்டு விற்கப்படும். அதன்படி, ஒரு பரிசுச்சீட்டு 50 பாட் (S$2) என்ற விலையில் விற்கப்படும்.
தேசிய சேமிப்பு நிதி, சமூகப் பாதுகாப்பு நிதியின் உறுப்பினர்களும் எந்தத் திட்டத்தின்கீழும் தங்களைப் பதிவுசெய்திராத ஊழியர்களும் அந்தப் பரிசுச்சீட்டை வாங்கலாம்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் பரிசுச்சீட்டு வாங்கலாம். என்றாலும், ஒருவர் ஒரு மாதத்திற்கு பரிசுச்சீட்டு வாங்க 3,000 பாட் (S$117) பணத்திற்குமேல் செலவிட முடியாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 5 மணிக்குப் பரிசுக்குலுக்கல் இடம்பெறும். பிராம்ப்ட்பே (PromptPay) சேவைகள் மூலம் வெற்றியாளர்களின் வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை செலுத்தப்படும்.
ஆயினும், பரிசுச்சீட்டு விற்பனை மூலம் திரட்டப்படும் தொகை, ஒருவர் வென்றாலும் வெல்லாவிடினும் அவற்றை வாங்கியவர்களுக்காகச் சேமித்து வைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஐவருக்கு முதல் பரிசாக ஒரு மில்லியன் பாட் வழங்கப்படும். 10,000 பேருக்கு இரண்டாம் பரிசாகத் தலா 1,000 பாட் கிடைக்கும்.
பரிசுச்சீட்டு வாங்கும் ஒவ்வொருவரின் பெயரிலும் தேசிய சேமிப்பு நிதியின்மூலம் கணக்கு தொடங்கப்படும். பரிசுச்சீட்டிற்காக அவர்கள் செலவிடும் தொகை, அவர்களின் கணக்கிலேயே சேமித்து வைக்கப்பட்டு, வட்டியோடு திருப்பித் தரப்படும்.
60 வயதிற்கு மேற்பட்டோரும் இந்தப் பரிசுச்சீட்டை வாங்கலாம். ஆனால், தாங்கள் செலவிட்ட தொகையைத் திரும்பப் பெற அவர்கள் பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

