கோலாலம்பூர்: மலேசியாவின் செலாயாங் பாருவில் சனிக்கிழமை (டிசம்பர் 6) இரவு மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 843 கள்ளக் குடியேறிகள் பிடிபட்டனர்.
குடிநுழைவுச் சட்டத்திற்கு எதிராக அவர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டோரில் 21 முதல் 53 வயதிற்குட்பட்ட 808 ஆண்களும் 35 பெண்களும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில முதல்வர் அமிருதீன் சாரி தெரிவித்தார்.
அவர்கள் இந்தோனீசியா, பங்ளாதேஷ், இந்தியா, மியன்மார், நேப்பாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலப் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான திரு அமிருதீன் குறிப்பிட்டார்.
“சாலையோரங்களில் வணிகம் செய்வோர் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் தென்பட்டது குறித்து உள்ளூர்ச் சமூகத்திலிருந்து புகார்கள் வந்ததை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உளவுத் தகவலையும் உறுதிப்படுத்திய பின்னரே அதிரடிச் சோதனை இடம்பெற்றது,” என்று செய்தியாளர்களிடம் அவர் விளக்கினார்.
இதற்குமுன் செரி மூடா, சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தை உள்ளிட்ட பிற இடங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அடையாள ஆவணங்கள் இல்லாதது, வேலை அனுமதிச்சீட்டு நிபந்தனைகளை மீறியது, விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்தது, அங்கீகரிக்கப்படாத அட்டைகளைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குடிநுழைவுக் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் திரு அமிருதீன் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை நடந்த அதிரடிச் சோதனையின்போது போதைப்பொருள் புழங்கிய சந்தேகத்தின்பேரில் உள்ளூர்வாசிகள் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
தொழில் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும் தேசியப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் நிறுவனங்களுக்கு முதல்வர் அமிருதீன் எச்சரிக்கை விடுத்தார்.

