உலக அரங்கில் மலேசியாவும் இந்தியாவும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்: அன்வார்

உலக அரங்கில் மலேசியாவும் இந்தியாவும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்: அன்வார்

1 mins read
71de0667-f094-4b5b-b5e5-5b059dfc20c8
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். - படம்: தமிழ் மலர்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வியாழக்கிழமை (மார்ச் 19) மாலை தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மலேசியக் குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் ஆற்றிய உரையைத் தாம் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள திரு அன்வார், அமைதி மற்றும் நிம்மதியின் களமாகக் கருதப்படும் ரமலான் மாதத்தில், மோசமடைந்து வரும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அண்மைய நிகழ்வுகள் குறித்து தாங்கள் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவுடன் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் குண்டுவீச்சு மற்றும் இனப்படுகொலையைக் கண்டிப்பதில் மலேசியாவின் உறுதியான, நிலையான நிலைப்பாட்டை தாம் மோடியுடன் பகிர்ந்துகொண்டதாக அன்வார் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டையை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கவும், அமைதியான முறையில், அரசதந்திரம், ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்கவும் தாங்கள் ஒப்புக்கொண்டதாக அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிக்ஸ் அமைப்பு உட்பட எல்லா அனைத்துலக அரங்கங்களிலும் கூட்டுக்குரலை வலுப்படுத்துவதில் மலேசியாவும் இந்தியாவும் கைகோக்க வேண்டும் என்பது குறித்தும் இருவரும் பேசியதாக அன்வார் விவரித்தார்.

இதன் விளைவாக, உணவுப் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படும் தாக்கம் உட்பட, மோசமான உலகப் பொருளியல் சூழலால் உலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உறுதியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

உலக அமைதிக்காக மலேசியாவும் இந்தியாவும் தங்களின் கூட்டு உறுதிப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்ததாகத் தமிழ் மலர் செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்