ஷா ஆலம்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலிலும் பக்கத்தான் ஹரப்பான்-தேசிய முன்னணி கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளது என்று ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) தலைமைச் செயலாளர் ஆண்டனி லோக் கணித்துள்ளார்.
2028ஆம் ஆண்டு மலேசியாவின் 16வது பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஒரு காலத்தில் அரசியல் வைரிகளாக இருந்த பக்கத்தான் ஹரப்பானும் தேசிய முன்னணியும் தற்போது கூட்டாக ஆட்சி செய்து வருகின்றன.
ஆனால் கூட்டணி தொடர்வதற்கு சில நிபந்தனைகளும் இருப்பதாக அவர் கூறினார்.
தேசியத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் மலேசியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவு, பணவீக்கத்தை கையாள்வதைப் பொறுத்து சாத்தியமான கூட்டணி அமையும் என்றார் திரு லோக்.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கம், பொருளியல் சூறாவளியிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அடுத்த மூன்று ஆண்டுகளில் நமது பொருளியலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் வாழ்க்கைச் செலவினங்களையும் கட்டுப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்வை வழங்க முடிந்தால் அடுத்த தேர்தலுக்குள் நாடு சரியான திசையில் செல்வதாக பெரும்பான்மை மலேசியர்கள் உணர்வார்கள். ஒட்டுமொத்த மக்களும் தங்கள் வாழ்க்கை முன்பைவிட மேம்பட்டதாக இருக்கும் என்பதையும் நம்புவார்கள்.
“இவற்றை நம்மால் சாதிக்க முடிந்தால் தற்போதைய அரசாங்கம், தேர்தலில் வெற்றி பெற்று புத்ராஜெயாவில் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்,” என்று தாம் நம்புவதாக திரு ஆண்டனி லோக் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிலாங்கூரில் ஜனநாயக செயல் கட்சி மாநாட்டில் அவர் பேசினார்.
இந்த மாநாடு, ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்றது.
டிஏபி துணைத் தலைவர் தெரசா கோக்குக்கும் அம்னோ இளையர் அணித் தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சாலேவுக்கும் இடையிலான மோதல், கூட்டணியைப் பாதிக்குமா என்று லோவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அரசியலில் இதுவெல்லாம் வழக்கமானதே என்றார்.

