விபத்துக்குள்ளான காரிலிருந்து இறங்கிய ஆடவர் இன்னொரு கார் மோதி உயிரிழப்பு

விபத்துக்குள்ளான காரிலிருந்து இறங்கிய ஆடவர் இன்னொரு கார் மோதி உயிரிழப்பு

2 mins read
19af2f67-407a-4644-85d8-c9c7cc7b970c
மாதிரிப்படம்: - ஊடகம்

கோத்தா கினபாலு: இன்னொரு கார்மீது தனது கார் மோதியதையடுத்து, அதில் இருந்து இறங்கி சாலையில் நின்றிருந்த ஆடவர், வேறொரு கார் மோதி உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) பின்னிரவு 12.30 மணியளவில் மலேசியாவின் லகாட் டத்து - சண்டக்கான் சாலையில் நிகழ்ந்தது. அந்த 38 வயது ஆடவர், 30 வயதுப் பயணியுடன் லகாட் டத்திலிருந்து சண்டக்கான் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக லகாட் டத்து மாவட்டக் காவல்துறை உதவித் தலைமை ஆணையர் ஸுல்பகரின் இஸ்மாயில் தெரிவித்தார்.

அப்போது, அந்த ஆடவரின் கார் சாலையில் வழுக்கியபடி எதிர்த்தடத்திற்குச் சென்றதாகவும் அப்போது எதிர்த்திசையில் 49 வயது ஆடவர் ஓட்டி வந்த கார்மீது மோதியதாகவும் கூறப்பட்டது.

இதனால், கார் லகாட் டத்து நோக்கிச் செல்லும் சாலைத் தடத்திற்குத் திரும்பியது. 49 வயது ஆடவரின் கார் வழுக்கியபடி சாலையின் இடது ஓரத்திற்குச் சென்றது.

இதனையடுத்து, அந்த 38 வயது ஆடவரும் அவரது காரில் இருந்த பயணியும் காரைவிட்டு இறங்கினர்.

“அந்த 38 வயது ஆடவர் சாலையின் நடுவில் நின்றிருந்த நிலையில், சண்டக்கான் நோக்கிச் சென்ற இன்னொரு கார் அவர்மீது மோதியது,” என்று திரு ஸுல்பகரின் விவரித்தார்.

படுகாயமடைந்த அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இவ்விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை.

மது அருந்திவிட்டு கார் ஓட்டினரா என்பதைக் கண்டறிவதற்காக மாண்டவர், அவர் ஓட்டிய காரில் பயணம் செய்தவர், மற்ற இரு கார்களின் ஓட்டுநர்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் திரு ஸுல்பகரின் கூறினார்.

குறிப்புச் சொற்கள்