கோலாலம்பூர்: மலேசியாவில் கொதிக்கும் எண்ணெய் வாணலியில் தவறி விழுந்த உணவு அங்காடி ஊழியர் உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம் புதன்கிழமை நடந்தது.
அவர் கோலா காங்சார் பகுதியில் இருக்கும் உணவு அங்காடி நிலையத்தில் உணவு தயாரித்துக் கொண்டிருக்கும்போது மயக்கம் ஏற்பட்டு கொதிக்கும் எண்ணெய் வாணலியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த 58 வயது ஊழியரின் பெயர் லியு யூகாய் என்றும் அவரின் ‘சிக்கன் சாப் ரைசுக்கும்’ அவருடையை உடைக்கும் அவர் மரக்கரண்டிகளைப் பிடிக்கும் பாணிக்கும் அந்தப் பகுதி மக்களிடையே நன்கு அறியப்பட்டவர் என்றும் மலேசியாவின் சீனமொழி நாளிதழான சின் சியூ தெரிவித்தது.
மேலும், அவருக்கு முகம், மார்பு, முதுகுப் பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது என்றும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அவர் உயிருடன் இருந்தார் என்றும் அது சொன்னது.
மருத்துவமனையில் 90 நிமிடங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
அவர், பல ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் திரு.லியுவின் மூத்த சகோதரர் சின் சியூவிடம் தெரிவித்தார்.

