மலேசியாவின் மக்கள்தொகை 34.4 மில்லியனை எட்டியது

மலேசியாவின் மக்கள்தொகை 34.4 மில்லியனை எட்டியது

2 mins read
023be094-497c-4cb9-a42d-64e56a64c71f
ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 110 ஆண்கள் என்ற பாலின விகிதம் இருந்தது என்று 2026 முதலாம் காலாண்டுக்கான மக்கள்தொகை அறிக்கை தெரிவித்தது. - கோப்புப் படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புத்ராஜெயா: 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவின் மொத்த மக்கள்தொகை 34.4 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மலேசியப் புள்ளிவிவரத் துறை வியாழக்கிழமையன்று (மே 14) தெரிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 34.2 மில்லியனுடன் ஒப்பிடும்போது 0.5 விழுக்காடு என்ற மெதுவான வளர்ச்சியைக் காட்டுகிறது.

2026 முதலாம் காலாண்டில் ஆண்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 17.9 மில்லியனிலிருந்து 18.0 மில்லியனாகவும் பெண்களின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்பு இதே காலகட்டத்தில் இருந்த 16.2 மில்லியனிலிருந்து 16.3 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது என்று மலேசியப் புள்ளிவிவரத்துறையின் தலைமை அதிகாரி டாக்டர் முகமது உசிர் மஹிதின் கூறினார்.

ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 110 ஆண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. அதே சமயம் மலேசியக் குடிமக்களிடையே இந்த விகிதம் 102ஆக இருக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், முதியோர் மக்கள்தொகையின் (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) விகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து 8.0 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இனவாரியாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 58.2 விழுக்காடாகப் பதிவான மலாய்க்காரர்களின் எண்ணிக்கை, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 58.3 விழுக்காடாகக் கூடியது.

இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக மாறாமல் இருந்தது. அதே சமயம் முதலாம் காலாண்டில் சீனர்களின் எண்ணிக்கை 22.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 97,843 ஆக இருந்த உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, தற்போது 94,807ஆகத் தொடர்ந்து குறைந்துள்ளது என்றும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 49,137 ஆக உயர்ந்து, ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது என்றும் முகமது உசிர் குறிப்பிட்டார்.

“சிலாங்கூர் அதிகபட்சமாக 17,990 குழந்தைகளையும் லபுவான் குறைந்தபட்சமாக 294 குழந்தைகளையும் பதிவு செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 49,139 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 49,863 இறப்புகளைவிட 1.5 விழுக்காடு குறைவு. இதில் சிலாங்கூர் அதிகபட்சமாக 8,042 இறப்புகளையும் புத்ராஜெயா குறைந்தபட்சமாக 81 இறப்புகளையும் பதிவு செய்துள்ளன என்று மேலும் அவர் கூறினார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே அதிகபட்சமாக 35,130 இறப்புகள் (71.5%) பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து 41-59 வயதினர் (19.9%), 15-40 வயதினர் (6.8%), 0-14 வயதினர் (1.8%) என அடுத்தடுத்த பிரிவுகளில் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று பெர்னாமா தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
மக்கள்தொகைஆண்முதியோர்