டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படலாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த உடன்பாடு தங்களது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தாது என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் 8ஆம் தேதிமுதல் இருதரப்பும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், அமெரிக்கா, ஈரான் மற்றும் இதர நாடுகளுக்கு இடையிலான உடன்பாடு கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உலகக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு இடம்பெறும் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, அனைத்துலகப் பொருளியல் தடைகளின்கீழ் முடக்கப்பட்ட ஈரானின் நிதியை விடுவிக்கவும், ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை விலக்கிக்கொள்ளவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்குக் கைம்மாற்றாக, ஈரானிய நிர்வாகத்தின்கீழ் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக் காலத்தில் ஈரான் தனது எண்ணெய்யையும் எரிவாயுவையும் தடையின்றி விற்க அனுமதிக்கப்படும் என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.
போரை முடிவிற்குக் கொண்டுவரும் உடன்பாடு தொடர்பில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், எகிப்து, ஜோர்தான், பஹ்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்களும் துருக்கி, பாகிஸ்தான் நாடுகளின் பேராளர்களும் சனிக்கிழமை (மே 23) தொலைபேசிவழி அதிபர் டிரம்ப்புடன் கலந்துரையாடினர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஏப்ரலில் அமெரிக்கா-ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை நடத்திய பாகிஸ்தானால் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த முடியும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, லெபனான் எல்லையில் போர்நிறுத்த விதிமீறல்கள் தொடருகின்றன. சனிக்கிழமை லெபனான் ராணுவப் பாசறைமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்தார்.
அதற்கு மறுநாள் லெபனானின் நபதியே நகரிலிருந்த குடிமைத் தற்காப்பு முகமையின் வட்டார நிலையம் இஸ்ரேலியத் தாக்குதலால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

