சமூகநல அட்டையைப் பயன்படுத்த முகத்தில் போலியான புருவம் ஒட்டிய துறவி

1 mins read
0a67d659-ff71-4deb-b87b-da9fb4689c0f
புருவங்கள் இல்லாததால் அந்த இடத்தில் கருப்பு நிற வில்லையை ஒட்டி, செயற்கைப் புருவங்களோடு செயலியின் ஒப்புதலைப் பெற்ற துறவி. - படம்: ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த துறவி ஒருவர், தனக்கு அந்நாட்டு அரசாங்கம் அளித்த சமூகநல அட்டையைப் பயன்படுத்தி கடையில் கட்டணம் செலுத்துவதற்காகத் தனது முகத்தில் செயற்கையான புருவங்களை ஒட்டியுள்ளார்.

இதுதொடர்பான பதிவு சமூகத்தளமான ‘ஃபேஸ்புக்கில்’ திங்கட்கிழமை (டிசம்பர் 2) பரவலானது.

அந்தத் துறவியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தொடர்புடைய மூன்று புகைப்படங்கள் ‘CNew Viewer 4K’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 2ஆம் தேதி காலை 11.17 மணிக்கு வெளியாகின. பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் அப்பதிவை 1,500க்கு மேற்பட்டவர்கள் பகிர்ந்தனர்.

தனது சமூகநல அட்டையைப் பயன்படுத்துவதில் அந்தத் துறவி சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அந்த அட்டையில் இருக்கும் புகைப்படத்துடன் அவருடைய முகம் ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தினால் அட்டைவழி பொருளுக்கான பணத்தைச் செலுத்துவதைக் கட்டணச்செயலி நிராகரித்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

அதற்கு, அந்தத் துறவிக்கு புருவங்கள் இல்லாததுதான் காரணம் என எண்ணிய கடை ஊழியர், அதனால், துறவிக்குக் கருப்பு நிற வில்லையைப் பயன்படுத்தி செயற்கையாகப் புருவங்களை ஒட்டினார்.

அந்த முயற்சி வெற்றி கண்டது. சமூக நல அட்டையில் இருக்கும் புகைப்படத்துடன் துறவியின் முகம் ஒத்துப்போனது. செயலி வழி கட்டணமும் செலுத்தப்பட்டது.

அங்கு நடப்பதைப் பார்த்த மற்றோர் ஊழியர் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடி சிரிப்பதையும் அந்தப் புகைப்படங்களில் காண முடிந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்