சிட்னியில் அவசரமாகத் தரையிறங்கிய குவாண்டாஸ் விமானம்

1 mins read
7c966f1f-5df7-4ba3-8186-9ee67a0cecaf
விமானத்தின் இயந்திரத்திலிருந்து பலத்த ஓசை கேட்டதாகப் பயணிகள் கூறினர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பிரிஸ்பன் நகருக்குக் கிளம்பிய குவாண்டாஸ் நிறுவன விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவசரமாகத் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தின் இயந்திரத்திலிருந்து பலத்த ஓசை கேட்டதையடுத்து அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கிளம்பிய விமானம் உடனே திரும்பி, பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக சிட்னி விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிட்னி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டதை அடுத்து விமான ஓடுபாதைக்கு அருகே அமைந்துள்ள புல்வெளியில் தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் கூறின.

விமான இயந்திரத்தால் அவ்வாறு தீ மூண்டதா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

“விமானப் போக்குவரத்து மீட்பு, தீயணைப்புப் பிரிவினர் புல்வெளியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிட்னி விமான நிலையம் அவர்களுக்கு உதவி வருகிறது,” என்று தீயணைப்புத் துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்