இலங்கை: அதிரடிச் சோதனைகளில் 15,000 பேர் கைது

இலங்கை: அதிரடிச் சோதனைகளில் 15,000 பேர் கைது

1 mins read
3ca72d95-3761-4146-b859-fccd0dbbc623
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

கொழும்பு: ராணுவத்தின் துணையுடன் இலங்கையில் கடந்த ஒருவார காலமாக மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அதிரடி நடிவடிக்கைகளின்போது கிட்டத்தட்ட 15,000 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று அந்நாட்டின் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) அறிவித்தது.

‘நீதி’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது 272 கிலோ கஞ்சா, 35 கிலோ ஹஷிஷ், 9 கிலோ ஹெராயின் உட்பட கிட்டத்தட்ட 440 கிலோ போதைப்பொருள்கள் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்தியப் பெருங்கடல் வழியாகவே போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

கைதானவர்களில் ஏறக்குறைய 1,100 பேர் போதைப் பித்தர்கள் என்றும் அவர்கள் ராணுவத்தால் நடத்தப்படும் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அறிக்கை கூறியது.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, அதிரடிச் சோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன என்றும் டிசம்பர் 26ஆம் தேதிக்குப் பிறகு அவை மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காவல்துறையின் இந்த நடவடிக்கைகளை மனித உரிமை ஆர்வலர்கள் நிராகரித்துள்ளனர்.

சான்றுகளின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக, ஏழை மக்கள் வாழும் பகுதிகளைக் குறிவைத்து அவை நடத்தப்படுகின்றன என்றும் சொன்னார் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சற்குணநாதன்.

பெரிய அளவில் போதைப்பொருள் கடத்துவோரை விட்டுவிட்டு, போதைப் புழங்கிகளையும் சிறு வணிகர்களையும் காவல்துறை குறிவைப்பதாக அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்காவல்துறைசோதனைஇலங்கை