ஈரான்-சவூதி அரேபியா சர்ச்சை நீடிக்கிறது

ரியாத்: சவூதி அரேபியாவும் ஈரானும் அரசதந்திர உறவுகளை முறித்துக் கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடிக்கிறது. ‌ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உள்பட 47 பேருக்கு மரண தண்டனையை சவூதி அரேபியா நிறைவேற்றியதிலிருந்து ஈரானுக்கும் சவூதி அரேபியாவுக் கும் இடையில் சர்ச்சை நிலவுகிறது. ‌ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள சவூதி தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்.

இதனால் ஈரானுடனான அரசதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக சவூதி அரேபியா அறிவித்தது. அத்துடன் அங்குள்ள ஈரானியத் தூதர்கள் வெளியேறுவதற்கும் அது 48 மணி நேர காலக்கெடு விதித்தது. ஈரானுடனான விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொள்வதாகவும் சவூதி அரசாங்கம் அறிவித்தது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் வேளையில் அதுகுறித்து கவலை அடைவதாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவில் ‌ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: ராய்ட்டர்ஸ்