முக்ரிஸ் விவகாரம் குறித்து கெடா எதிர்க்கட்சி சட்டமன்ற பிரதிநிதிகள் கருத்து

பெட்டாலிங் ஜெயா: கெடா மாநில தலைமைத்துவ நெருக்கடி குறித்து அம்மாநிலத்தின் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெடா ஆட்சி மன்ற உறுப்பினர்கள் பேச்சு நடத்தியுள்ளனர். கெடா முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீர் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து பேசுவதற்காக அம்மாநில எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு ஆட்சி மன்றம் முன்னதாக அழைப்பாணை அனுப்பியிருந்தது. திங்கட்கிழமை கெடா மாநில தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேருடன் ஆட்சி மன்றம் பேச்சு நடத்தியது. அவர்கள் அனைவருமே முக்ரிஸ் மகாதீரை முதலமைச்சர் பதவியி லிருந்து நீக்குவதற்கு விருப்பம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஆனால், கெடா மாநில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரில் எத்தனை பேர் முக்ரிஸ் மகாதீர் பதவியில் நீடிக்க ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த 15 உறுப்பினர்களில் எட்டு பேர் பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள். நால்வர் கெடிலான் கட்சி உறுப்பினர்கள். இருவர் ஜனநாயக செயல்கட்சி உறுப் பினர்கள். மற்றொருவர் அமானா கட்சி சட்டமன்ற உறுப்பினர். இந்த நான்கு கட்சிகளில் கெடிலான் கட்சி உறுப்பினர்கள் நால்வரும் முக்ரிஸ் பதவியில் நீடிப்பதை ஆதரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரி வித்துள்ளார்.