வடகொரியாவின் யோசனையை நிராகரித்தது அமெரிக்கா

வா‌ஷிங்டன்: கொரியத் தீபகற்பப் பிரச்சனை தொடர்பாக வடகொரியா முன்வைத்த அமைதி ஒப்பந்த பேச்சு வார்த்தையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அணு ஆயுதம் தொடர்பான அதன் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை மேற்கொண்டதுடன் நீண்டதொலைவு ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டது. இதனால் வடகொரியா மீது உலக நாடுகள் சினம் கொண்டுள்ளன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அதன் முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவும்கூட கண்டனம் தெரிவித்தன. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வடகொரியா மீது அமெரிக்கா சில நாட்களுக்கு முன்பு புதிய தடை விதித்தது. இதற்கிடையே கொரிய அமைதி ஒப்பந்தத்திற்காக சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் தெரிவித்திருந்தது.

ராணுவ அணிவகுப்பைப் பார்வையிடும் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன். கோப்புப் படம்: ராய்ட்டர்