மோசமான வானிலையால் ஆட்டம் கண்ட விமானம்; 17 பேர் காயம்

ஹாங்காங்: இந்தோனீசியாவின் பாலியில் இருந்து 204 பயணிகள், 12 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று ஹாங்காங் நோக்கிப் புறப்பட்ட ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் பாலியில் தரையிறங்கியது. மோசமான வானிலையால் நடுவானில் அந்த ஏர்பஸ் விமானம் அதிகமாகக் குலுங்கியதாகவும் அதில் 17 பயணிகள் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் எழுவருக்கு பாலி விமான நிலைய மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதர பத்துப் பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பயணிகளுக்குச் சிராய்ப்புகள் ஏற்பட்டபோதும் அவர்களால் எழுந்து நடக்க முடிந்தது என்றும் அளவுக்கு அதிகமாக ஆட்டம் கண்டபோதும் விமானத்திற்குப் பெரிய சேதமில்லை என்றும் பாலி விமான நிலையத் தலைமை நிர்வாகி கூறினார்.