டிரம்ப்: வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசுவேன்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட பல மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை தொடங்கிய திரு டோனால்டு டிரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய பேச்சு மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால்விட்டு வரும் வடகொரியாவுடன் தாம் பேச்சு நடத்தவிருப்பதாக திரு டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியாவுடனான அமெரிக் காவின் உறவு குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு கூறினார். வடகொரியத் தலைவர் கிம்முடன் பேசுவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் பற்றி அவருடன் பேச தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார். அத்துடன் சீனாவுடனான பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தம்மால் தீர்வு காண முடியும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.