சிறுபான்மை சமயக்குழுவினர் மீது தேச துரோகக் குற்றச்சாட்டு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் காஃபதார் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய சிறுபான்மைய சமயக்குழு உறுப்பினர்கள் மூவர் மீது தேச துரோகம், சமய நிந்தனை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் நடத்தப்பட்ட பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு தேசிய போலிசின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளது. காஃபதார் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான மஹ்ஃபில் முயிஸ் டுமானுருங், ஆண்ட்ரி காயா, அஹ்மது முசாடெக் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதை போலிஸ் தலைமை இயக்குநர் பிடிகேடியர் ஜென ரல் அகுஸ் அண்ட்ரியாண்டோ தெரிவித்தார்.

இவர்களுள் முசாடெக் என்பவர் இதற்கு முன்னர் தேச துரோகக் குற்றத்துக்காகக் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்தவர். சிறையில் இருந்து வெளியானதும் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி யில் காஃபதார் இயக்கத்தை அவர் தொடங்கினார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆவணங்களும் புனித நூல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் ஜகார்த்தாவில் செய்தி யாளர்களிடம் திரு அகுஸ் கூறினார்.