‘ஹிரோ‌ஷிமா நினைவுகள் நெஞ்சைவிட்டு அகலாதவை’

ஹிரோ‌ஷிமா: உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா வீசிய ஹிரோ‌ஷிமா நகருக்கு அதிபர் ஒபாமா நேற்று வருகையளித்தார். 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது நடந்த அச்சம்பவத்திற்குப் பிறகு அங்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் ஒபாமாதான். அணுகுண்டு வீச்சில் சிக்கி ஹிரோ‌ஷிமா நகரில் 140,000 பேர் மாண்டனர். இரண்டு நாட்கள் கழித்து நாகசாகி நகரில் நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலுக்கு 74,000 பேர் பலியாயினர்.

முன்னதாக, அமைதி நினைவுப் பூங்காவுக்குச் செல்லு முன் ஹிரோ‌ஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகத்துக்கு ஒபாமா சென்றார். ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஸேபா அபேயும் அவருடன் சென் றார். அங்குள்ள அணையாவிளக்கு முன் சற்றுநேரம் அமைதியாக நின்ற இருவரும் பின்னர் அணுகுண்டு வீச்சில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மலர் வளையம் வைத்தனர். அதன்பிறகு உரையாற்றிய ஒபாமா, 6 ஆகஸ்ட் 1945 ஹிரோ‌ஷிமா நினைவுகள் நெஞ்சைவிட்டு ஒருபோதும் அகலாதவை என்றார். அணுகுண்டு தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்திருப்போரைச் சந்தித்த ஒபாமா, அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.

அணுகுண்டு வீச்சில் உயிர்தப்பிய ஒருவரின் சோகத்தில் பங்கேற்று அவரை ஆரத்தழுவி ஆறுதல் கூறும் அதிபர் ஒபாமா. படம்: ஏஎஃப்பி