‘லஞ்சம் வாங்கும் செய்தியாளர்களை கொல்வது சரியே’

டாவாவ்: லஞ்சம் வாங்கும் செய்தியாளர்களைக் கொலை செய்வது தவறில்லை என்று பிலிப்பீன்சின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ரொடிரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தலைநகர் மணிலாவில் செய்தியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக திரு டுட்டார்ட்டேயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த திரு டுட்டார்ட்டே, இதுவரை கொலை செய்யப்பட்ட செய்தியாளர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தவறு செய்தவர்கள் என்றும் தவறு செய்யாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். கடந்த முப்பது ஆண்டுகளில் பிலிப்பீன்சில் கிட்டத்தட்ட 174 செய்தியாளர் கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.