பிரான்ஸ், ஜெர்மனியில் வெள்ளப்பெருக்கு: 5 பேர் மரணம்

பெர்லின்: பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளில் பெய்த கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் தவிக்க நேர்ந்துள்ளது. சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ள நிலையில் வீட்டுக் கூரைகளில் தஞ்சம் அடைந்த ஏராளமானோர் உதவிக்காக காத்திருப்பதாக தகவல்கள் கூறு கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட் டுள்ளன. ஜெர்மனியில் ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த மூவர் அங்கு இறந்து கிடந்ததாகவும் மற்றொரு மூதாட்டியின் சடலம் அவரது வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் மிதந்து காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்சில் பாரிஸ் நகரம் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு பாரிசில் குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.