நட்டுனா தீவுகளில் ஜோக்கோவி

ஜகார்த்தா: தென்சீனக் கடல் விவகாரத்தில் இந்தோனீசியாவின் நிலைப்பாட்டை சீனாவுக்கு வலியுறுத்தும் வகையில் அந்தக் கடற்பரப்பில் உள்ள நட்டுனா தீவுகளுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ போர்க்கப்பல் ஒன்றில் சென்றுள்ளார். நட்டுனா தீவுகளுக்கு அருகிலுள்ள கடல் பகுதி தனக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடியதை அடுத்து திரு விடோடோ இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனீசியாவின் தலைமைப் பாதுகாப்பு அமைச்சரும் வெளி யுறவு அமைச்சரும் திரு விடோடோ வுடன் நட்டுனா தீவுகளுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப் பட்டது.

பயணம் செய்த அந்தப் போர்க்கப்பலிலேயே அமைச்ச ரவைக் கூட்டத்தை நடத்த திரு விடோடோ திட்டமிட்டுள்ளதாகவும் இந்தோனீசிய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. “எங்கள் வரலாற்றில் நாங்கள் ஒருமுறைகூட சீனாவிடம் இது போன்று கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. இந்த விவகாரத்தை எங்கள் அதிபர் ஒரு சிறிய விஷயமாகக் கருத வில்லை என்பதை இது பறைசாற்று கிறது,” என்று தலைமைப் பாதுகாப்பு அமைச்சர் லுஹுட் பண்ஜாய்த்தான் தி ஜகார்த்தா போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்தார். இந்நிலையில், நட்டுனா தீவுகள் இந்தோனீசியாவுக்குச் சொந்த மானது என்பதில் தனக்கு மாற்று கருத்து ஏதும் கிடையாது என்று சீனா அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தத் தீவு களுக்கு அருகில் உள்ள கடற்பகுதி யாருக்குச் சொந்த மானது என்பதில் சர்ச்சை நீடிப்பதாக சீனா தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், நட்டுனா தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பகுதி இந்தோனீ சியாவுக்குச் சொந்தமானது என்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடி வலியுறுத்தியுள்ளார்.