16 வாகன விபத்து; அப்பளம்போல நொறுங்கிய காரில் தாய், மகள் பலி

பேராக்: பதினாறு வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் மனைவி நூருல் சையஸெய்லா இர்யானி சுஹாய்மி, 28, ஒன்றரை வயது மகள் ஹன்னா ஹுமைரா ஆகியோரை இழந்த முகமது ஹஸ்னுன் ராம்லி, 29, மோசமான காயங்களுடன் கோலா குபுபாரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் காலை 9.30 மணியளவில் நேர்ந்த இந்த விபத்தில் இவ்விருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டு போயினர்.

நான்கு டிரெய்லர்கள், இரண்டு வேன்கள், ஒன்பது கார்கள், ஒரு டாக்சி ஆகியன வடக்கு=தெற்கு விரைவுச் சாலையில் கோலாலம்பூருக்குச் செல்லும் தடத்தில் விபத்துக்குள்ளாகின. பனை எண்ணெய் ஏற்றிச் சென்ற டிரெய்லர்களில் ஒன்றின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் அது தடம் புரண்டு ஐந்து கார்களை நொறுக்கியது. முகம்மது ஹஸ்னுன் ஓட்டிச் சென்ற காரின் மற்றொரு பக்கத்தை வேறொரு டிரெய்லர் இடித்தது. இதனால் ஹஸ்னுனின் கார் அப்பளம்போல் நொறுங்கியது. அதிலிருந்து மாண்டோர் உடலை தீயணைப்பாளர்கள் மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டனர். காயமுற்ற மேலும் ஐவர் சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.