‘மாற்றுக் கருத்து கொண்ட பிரிட்டிஷ் மக்களிடம் உறவை மேம்படுத்தவேண்டும்’

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று வாக்களித்தவர்களிடம் உறவை மேம்படுத்தும் நேரம் வந்து விட்டதாக பிரட்டிஷ் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும் திரு பாரிஸ் ஜான்சன் தெரிவித் துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் இவர் இறங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்க வாக்களித்தவர்கள் கவலையிலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஜான்சன், எடுக்கப்பட்டுள்ள முடிவு சரியானதுதான் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என்று பிரிவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களிடம் கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும் பணியை பிரிட்டன் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் திரு ஜான்சன் கூறினார். இதற்கிடையே, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எவ் வாறு கையாள்வது என்பது பற்றி தங்களுக்கிடையே முழு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு அதிபர் ஹொலாந்தும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்திருக்கவேண்டும் என்று வாக்களித்தவர்களிடம் உறவை மேம்படுத்தி பொது வாக்கெடுப்பில் எடுக்கப்பட்ட முடிவு சரியானதுதான் என்பதை அவர்களிடம் எடுத்துக்கூறவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும் திரு பாரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்