எல்லையில் மீண்டும் ஊடுருவல்; 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ முகாம் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் சுவடு மறைவதற்குள் அப்பகுதியில் நேற்று மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர். லச்சிபூரா பகுதியில் பயங்கர வாதிகள் ஆயுதங்களுடன் நட மாடுவதாக இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் வந்தது. இதனையொட்டி ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். உடனே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகளும் பதிலடி கொடுத்தனர்.

இந்தச் சண்டையில் 8 பயங்கர வாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சுமார் 15 பேர் எல்லையில் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு சண்டை நடந்து வருவதாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது. இதே பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அது முதல் அங்கு இந்திய ராணுவம் கூடுதல் விழிப்புடன் உள்ளது.

இந்தியாவின் உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உருவ பொம்மையை எரிக்கும் இந்திய அரசியல் கட்சியினர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next