இந்தோனீசியாவில் பிடிபட்ட மலேசிய கப்பல்

டென்பசார்: சுமார் 30 டன் ரசாயன உரத்தை ஏற்றிவந்த மலேசிய கப்பல் இந்தோனீசியாவில் பிடிபட்டுள்ளது. மலேசியா விலிருந்து வந்த அக்கப்பலை பாலித் தீவில் இந்தோனீசியப் போலிசார் தடுத்து வைத்துள்ளனர். இந்த ரசாயனப் பொருளை வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் இந்தோனிசிய சுங்கத் துறையினரும் போலிசாரும் சம்பந்தப்பட்ட கப்பலின் பணி யாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடுமையான பயங்கரவாத மிரட்டலைக் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், இந்த ரசாயன உரத்திற்கும் தீவிரவாத கும்பல்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று போலிசார் ஆராய்ந்து வருவதாக பாலித் தீவின் போலிஸ் உயர் அதிகாரி சுகார்த்தியானோ தெரிவித்தார். தீவிரவாதப் பிரச் சினையை எதிர்நோக்கும் சுலாவேசித் தீவுக்கு இந்த உரம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மலேசிய மக்கள் உடனடியாக எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிடவேண்டாம் என்று மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கேட்டுக் கொண்டார். அக்கப்பல் மலேசியா விலிருந்து வந்ததா? அல்லது வேறு நாட்டிலிருந்து வந்ததா என்பது உறுதியாகத் தெரிய வில்லை என்றார் அவர்.