மலேசியா: தலை மூடப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள்

பாச்சோக்: மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் ஞாயிறன்று கம்போங் தஞ்சோங் ஹிலிர் பெக்கலாம் என்ற இடத்தில் வயல் வெளிக்கு அருகில் அடர்ந்த புதர்களுக்குள்ளே தலை மூடப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களில் பல கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் யாவரும் வேறு இடங்களில் கொல்லப்பட்டு இங்கு வீசி எறியப்பட்டிருக்கக் கூடும் என்று கிளந்தான் போலிஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் இஸ்மாயில் கூறுகிறார்.

“இவர்கள் அனைவரும் பழிவாங்கும் நோக்கில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இந்தக் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விசாரணையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்,” என்றும் அப்துல் ரஹ்மான் கருத்துரைத்தார். கொல்லப்பட்ட நால்வரும் 20லிருந்து 30 வயதுக்குள் இருக்கலாம் என்று கூறப்படுவதுடன் இந்தக் கொலைகள் போதைப் பொருள் தொடர்பானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.