தெரேசா மே: குடியேறிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும்

லண்டன்: பிரிட்டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் பிரிட் டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். சென்ற ஆண்டு டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் குடியேறிகள் 273,000 பேர் பிரிட்டனுக்கு வந்ததாக அதிகாரத்துவ புள்ளிவிவரத் தகவல் தெரிவித்தது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை 49,000 குறைவாகும். 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியான பின்னர் நமது எல்லைகளில் கட்டுப் பாடுகளை விதிக்க முடியும் என்றும் திருவாட்டி தெரேசா மே கூறினார்.