ரஷ்ய விமானத் தாக்குதலில் ஐஎஸ் தலைவன் கொல்லப்பட்டிருக்கலாம்

மாஸ்கோ: சிரியாவில் ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஐஎஸ் குழுவின் தலைவன் அபு பக்கர் அல் பாக்டாடி கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ராக்கா நகரில் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐஎஸ் குழுவின் தலைவர்கள் கூடியிருந்தபோது அவர்களைக் குறிவைத்து ரஷ்ய விமானங்கள் சென்ற மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தின. தாக்குதலில் பாக்டாடி கொல்லப்பட்டதாக இதற்கு முன்பும் பல தடவை செய்திகள் வெளிவந்திருப்பதால் இந்தத் தகவலை அமெரிக்காவால் உறுதிப்படுத்த முடியவில்லை. சிரியா அரசாங்கமும் இது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடவில்லை.