வடகொரியா விடுவித்த அமெரிக்கர் மரணம்

வா‌ஷிங்டன்: வடகொரியா சென்ற வாரம் விடுதலை செய்த அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பியர் மரணம் அடைந்தார். வடகொரியாவில் 17 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த 22 வயது மாணவர் ஓட்டோ வாம்பியர் அமெரிக்கா திரும்பிய சில நாட்களில் திங்கட்கிழமை மரணம் அடைந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான வாம்பியர் சுற்றுலாப் பயணமாக வடகொரியா சென்றி ருந்தபோது ஒரு ஹோட்டலி லிருந்து பிரசார அடையாள சின்னத்தைத் திருட முயன்றதாக அவர் மீது வடகொரியா குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்து அவருக்கு வடகொரியா 15 ஆண்டுகள் கடுந்தண்டனை விதித்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக கோமா நிலையில் இருந்துவந்த அந்த மாணவரை வடகொரியா மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாகக் கூறி சென்ற வாரம் விடுவித்தது.

கடந்த ஜூன் 13ஆம் தேதி அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்ட வாம்பியர், ஒஹையோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டதற்கு என்ன காரணம்? கோமா நிலைக்கு அவர் சென்றதற்கு என்ன காரணம்? என்ற அமெரிக்க மருத்துவர் களின் கேள்விகளுக்கு வட கொரியா சரியான விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வாம்பியர், ஒஹையோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த துயரச் செய்தியை அறிவித்த அவரது குடும்பத்தினர், தங்கள் மகன், வடகொரியர்களின் கைகளில் சிக்கி கொடூரமாகத் துன்புறுத்தப் பட்டதன் விளைவாக அவனது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு இறுதியில் மரணம் அடைந்ததாகக் கூறியுள்ளனர்.