எண்ணெய்க் கசிவு: பல வாகன விபத்து, 12 பேர் காயம்

சிலேத்தார் விரைவுச் சாலையில் நேற்று காலை ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால் ஒன்பது மோட்டார் சைக்கிள்கள், நான்கு கார்கள், ஒரு லாரி ஆகியவை விபத்துக்குள்ளாகின. இதன் விளைவாக 12 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 2 நுழைவாயிலுக்குப் பிறகு சிலேத்தார் விரைவுச்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக நேற்று காலை 10.33 மணிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டர் மூலம் தெரிவித்தது. விரைவுச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சாலை போக்கு வரத்துக்குத் திறந்துவிடப்பட்டதாக நேற்று பிற்பகல் 1.23 மணிக்கு போலிசார் தெரிவித்தனர். கனரக வாகனம் மீது இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கனரக வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். படம்: ‌ஷின் மின்