சோல்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி சந்தித்துப் பேசும்போது அமைதிப் பிரகடனம் அறிவிக்கப் படுவதற்கான சாத்தியம் இல்லை என்று தென்கொரியா தெரிவித் துள்ளது. அந்த உச்சநிலை சந்திப்பின் போது கொரியப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பிரகடனத்தை அறிவிக்கக்கூடும் என்று திரு டிரம்ப் கருத்து தெரிவித்திருந்ததையடுத்து தென்கொரியா இவ்வாறு கூறியுள்ளது.
சிங்கப்பூரில் வரும் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகக் கூறிய தென்கொரிய அதிபர் அலுவலகம், அந்த சந்திப்பில் உடனடியாக அமைதிப் பிரகடனம் அறிவிக்கப்படுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. அந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைவதைப் பொறுத்தே அமைதிப் பிரகடனம் அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அதிபர் அலுவலகம் தெரிவித்தது.