கோலாலம்பூர்: நான்கு ஆண்டுகள் சிலாங்கூர் முதலமைச்சராக இருந்த அஸ்மின் அலிக்குப் பதிலாக சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் அமிருதின் ஷாரி அப்பொறுப்பை ஏற்றுள்ளார். அலாம் ஷா அரண்மனையில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் திரு அமிருதின் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவரது பதவி ஏற்பு சடங்கு நேற்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் நடைபெற்றது.
பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் திரு அமிருதின் காலை 8 மணிக்கே தன் துணைவியார் மாஸ்டியானா முகமதுவுடன் அரண்மனையை வந்தடைந்தார். அமிருதின், மாநில இளைஞர் மேம்பாட்டு, விளை யாட்டு, கலாசார, தொழில் முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினரும் ஆவார். மலேசியாவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்ததை அடுத்து, திரு அஸ்மின் அலிக்கு பொருளியல் விவகார அமைச்சர் பொறுப்பு வழங்கப் பட்டது. அதை அடுத்து, சிலாங்கூரின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து பல கணிப்புகள் வெளியாகி இருந்தன.