டோனல்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கல் கோஹென், நியூயார்க் நீதிமன்றத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச் சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தேர்தலில் பாதிப்பை ஏற் படுத்தும் நோக்கத்தோடு 'வேட் பாளர்' (தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப்) கட்டளைப்படி தேர்தல் விதி முறைகளை மீறியிருந்ததாக அவர் கூறினார். டிரம்ப்புடன் ரகசிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இரு பெண்களின் வாயை மூடு வதற்காக பணம் கொடுக்கப் பட்டதை கோஹெனின் வாக்கு மூலம் உறுதி செய்கிறது. ஆனால் அதிபர் டிரம்ப் இதன் தொடர்பில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இரு பெண்களில் ஒருவருக்கு பணம் வழங்கிய கோஹெனுக்கு அந்தப் பணம் ஈடு செய்யப்பட்டது என்று மட்டும் கடந்த மே மாதம் திரு டிரம்ப் கூறியிருந்தார். நீதிமன்றத்தில் தம் மீது சுமத்தப்பட்ட எட்டு குற்றச்சாட்டு களையும் 51 வயது கோஹன் ஒப்புக்கொண்டார். இதில் வரி, வங்கி மூலம் செய்யப்பட்ட மோசடி ஆகியவையும் அடங்கும். இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. தற்போது கோஹென் 500,000 டாலர் பிணையில் விடு விக்கப்பட்டுள்ளார். நீதிபதியின் கேள்விக்குப் பதில் அளித்தபோது கோஹென் சற்றுத் தடுமாறினார். இதனால் நீங்கள் மதுபானம் குடித்தீர்களா என்று அவரிடம் நீதிபதி கேட்டார்.
வெஸ்ட் வெர்ஜினியா விமான நிலையத்தில் பேசிய அதிபர் டிரம்ப், மோசடி குற்றச்சாட்டுகளில் பால் மனஃபோர்ட் (வலது) குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது என்றார்.