வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாயி தீவில் வீசும் பலத்த புயல் காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன. புயலின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று பள்ளிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். கனமழை காரணமாக ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.
ஹவாயி தீவில் அவசரநிலை நடப்பில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மீட்புப் பணிகளுக்கு உதவவும் அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்நிலையில் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று அதன் விமானச் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
ஹவாயி தீவில் பலத்த புயல்காற்று வீசுவதுடன் அங்கு கனமழையும் பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி