கோலாலம்பூர்: சீனாவின் ஆதரவிலான இசிஆர்எல் எனப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புத் திட்டத்தை தள்ளி வைப்பதா? அல்லது மாற்று வழிமுறைகளில் அதனைக் கையாள்வதா? என்பது குறித்து மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை ஒத்திவைப்பது அல்லது வேறொரு தரப்பிடம் இந்தத் திட்டத்தை வழங்குவது ஆகிய அம்சங்கள் குறித்து இப்போதைக்கு ஆராயப் படுகிறது. இது தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.
இதற்கு சீனா ஒப்புக்கொண்டால் மலேசியா அதனைச் செய்யலாம் என்று அவர் கூறினார். அந்த ரயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக வெளிவந்த தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு மகாதீர், தனது சீனப் பயணத்தின் போது, "அத்திட்டத்தை ஒருவேளை நம்மால் கைவிட முடியும் என்றால் அத்திட்டத்தை கைவிட்டு விடலாம் அல்லது ஒத்திவைத்து விடலாம் என்றுதான் கூறியிருந்தேன்," என்று விளக்கினார். அதிகச் செலவில்லாமல் அதனைச் செய்வதற்கான இதர வழிகளை நாம் கண்டறிய வேண்டும் என்றார் அவர். கிள்ளான் துறைமுகத்தையும் கோத்தா பாருவையும் இணைக்கும் வகையில் 688 கி.மீட்டர் தொலைவுக்கு 81 பில்லியன் ரிங்கிட் செலவிலான ரயில் திட்டத்திற்கு முந்தைய அரசாங்கம் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.