சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் அமைச்சரவை பொறுப்பு ஏற்று இரண்டே நாட்களில் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் நேற்று பதவி விலகினார். முன்னைய பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமைக்கு கட்சிக்குள் ளாகவே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக அதிக வாக்கு களைப் பெற்று ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்றார். இதையடுத்து ஸ்காட் மோரிசன் பிரதமரானார். ஆனால் அவரது அமைச்சரவை பொறுப்பு ஏற்ற இரண்டே நாட்களில் ஜூலி பிஷப் பதவி விலகியிருப்பது ஆஸ்தி ரேலிய அரசியலில் மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
பதவி விலகிய பிறகு பேசிய ஜூலி பிஷப், இனி அரசியலில் பின்னணியில் இருந்து செயல்படப் போவதாகக் கூறினார். அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. "பின்னணியில் இருந்தாலும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக வலுவாகக் குரல் கொடுப்பேன்," என்று ஜூலி பிஷப் கூறினார். ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப் பினரின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள மோரிசனின் அரசாங் கத்துக்கு ஜூலி பிஷப்பின் பதவி விலகல் புதிய நெருக்கடியை ஏற் படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முன் னைய பிரதமர் மால்கம் டர்ன் புல்லின் தலைமைக்கு சவால் விடுக்கும் வகையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மால்கம் டர்ன்புல்லுக்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தச் சூழ்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்றார்.