மியன்மார் ராணுவத்தின் செயலை சாடிய அமெரிக்க நாடாளுமன்றம்

வா‌ஷிங்டன்: மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றியது இனப்படுகொலைக்குச் சமம் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் வெளியேறக் காரணமாக இருந்த மியன்மார் ராணுவத்தின் மீது குற்றம் சாட்டும் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இரு கட்சிகளையும் சேர்ந்த 394 பேர் வாக்களித்திருந்தனர். மனித குலத்திற்கு எதிராக மியன்மார் ராணுவம் புரிந்த செயல்களை அமெரிக்க கீழ் அவையும் குற்றம் சாட்டியுள்ளது. மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தியாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மியன்மார் ராணுவத்தின் செயல்கள் மன்னிக்க முடியாதவை என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் சென்ற மாதம் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் கூறியிருந்தார்.