தமிழைச் சிறப்பித்த அமெரிக்கா

அமெரிக்காவின் வடக்கு கேரலைனா மாநிலத்தில் நடப்பு ஜனவரி மாதம் தமிழ்மொழி மற்றும் கலாசார மாதமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. வடக்கு கேரலைனாவில் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அம்மாநில அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவமும் குறிப்பிடப்படும்படியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிக்குமாறு அங்குள்ள அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் ரோய் கூப்பர், 2019 ஜனவரி மாதத்தை தமிழ்மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்த காணொளியில், “தமிழர்களின் அடையாளமாகத் திகழும் தமிழ்மொழி, இன்னும் எழுதப்பட்டு, பேசப்பட்டு வரும் பழமையான மொழிகளுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் பல அமெரிக்க மாநிலங்களிலும் தமிழ் பேசப்பட்டு வருகிறது.

“வடக்கு கேரலைனாவில் வசிக்கும் தமிழர்கள் மாநிலத்தின் பன்முகக் கலாசாரத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளனர். இங்குள்ள தமிழர்கள் தலைமுறைகள் கடந்தும் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிக்காக்கும் விதமாக தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, இளம் தலைமுறையினருக்குத் தமிழைக் கற்றுக்கொடுத்து வருகின்றனர். 

“தமிழர்களுடன் இணைந்து தைப்பொங்கலைக் கொண்டாடுவதில் வடக்கு கேரலைனா மிக்க மகிழ்ச்சி அடைகிறது,” என்று திரு கூப்பர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் அனைத்து குடிமக்களும் இம்மாதத்தை தமிழ்மொழி, கலாசார மாதமாக அனுசரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் தமிழ்மொழி விழா கொண்டாடப்பட்டு வருவதும் கனடாவில் ஜனவரி மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next