டிரம்ப் செய்தது சரியே: அமெரிக்க தலைவர்கள்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்சநிலை சந்திப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிறுத்தியது சரியே என்று அமெரிக்காவின் தலைவர்கள் பலர் கூறினர். ஒருசிலர், அவர் அந்தச் சந்திப்பை நடத்தியிருக்கக் கூடாது என்றும் சொல்கின்றனர்.

திரு டிரம்ப்பின் முடிவுகளை ஜனநாயகக் கட்சியினர் ஊடகங்களின் முன்னிலையில் கடுமையாக விளாசித்து வருவது வழக்கமாக இருந்தாலும் இந்த முறை அவர்களில் பலர் திரு டிரம்ப்பின் முடிவை ஆதரித்தனர். 

“விரிவான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வடகொரியா தயங்கும் என்று அதிபர் தெரிந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மை தலைவர் ‌ஷூமர் தெரிவித்தார்.

உச்சநிலை சந்திப்பின் வழி அமெரிக்க அதிபர் ஒருவரை நேரில் சந்திக்க திரு கிம் பெற்றுள்ள வாய்ப்பு அவருக்குப் பெரிய வெற்றி என்று நாடாளுமன்ற பேச்சாளர் நேன்சி பெலோசி தெரிவித்தார். வடகொரியா மீதான வர்த்தகத் தடைகள் அணுவாயுதக் களைவின்றி நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையைத் திரு டிரம்ப் ஏற்காதது மிக நல்லது என்றும் அவர் கூறினார்.

யொங்பியோன் அணுவாயுத நிலையத்தை மூடுவதற்குப் பதிலாக வர்த்தகத் தடைகள் முழுமையாக நீக்கப்படவேண்டும் என்று திரு கிம் கேட்டிருந்ததாகத் திரு டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அவரது கூற்றை  வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரீ யோங் ஹோ மறுத்தார். வடகொரியா மீதுள்ள 11 வர்த்தகத் தடைகளில் அதன் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் 5 வர்த்தகத் தடைகள் நீக்கப்படவேண்டும் என்று திரு கிம் கோரியதாக அவர் கூறினார்.