நஜிப்பின் நிதானத்தை இழக்க வைத்த பேட்டிக்குப் பரிசு

பிரிட்டனின் ‘ராயல் டெலிவிஷன் சொசைட்டி’ (ஆர்டிஎஸ்) தொலைக்காட்சி நிகழ்ச்சி விருதுகளில் மலேசியாவின் முன்னையப் பிரதமர் நஜிப்புடன் ‘அல்-ஜஸீரா’ செய்தி நிறுவனம் எடுத்துள்ள பேட்டிக்குப் பரிசு வழங்கப்பட்டது.

விருது கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக ‘அல்-ஜஸீரா’ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. 

விருதுக்காக முன்மொழியப்பட்ட படைப்புகள் அனைத்தும் பேட்டியாளர்களின் திறமையைக் காட்டியதாக ஆர்டிஎஸ் நடுவர் குழு தெரிவித்தது. ஆனால் திரு நஜிப்புடனான பேட்டி, அதன் துணிச்சல், உறுதி, சுவாரஸ்யம் ஆகியவற்றுக்காகத் தனித்து நிற்பதாக நடுவர் குழு கூறியது. 

“திரு நஜிப்பைப் பேட்டி எடுத்த மேரியன் ஜோலி கையாண்ட குறுக்கு விசாரணை முறை பார்வையாளரை மேலும் பார்க்கத் தூண்டுகிறது. வைராக்கியமும் நளினமும் கலந்த அவரது தொணி வியக்கத்தக்கது,” என்று அந்தக் குழு தெரிவித்தது.

கடந்த அக்டோபரில் எடுக்கப்பட்ட அந்தத் தொலைக்காட்சி பேட்டியின்போது திரு நஜிப், தனது நிதானத்தை இழந்து வெளியேறினார். 1எம்டிபி பண மோசடி, இளஞ்சிவப்பு வைர மோசடி ஆகியவை குறித்து அவரிடம் பல வினாக்கள் வீசப்பட்டன.