சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிந்த அயர்லாந்து ஆடவர் பினாங்கில் கொலை

அயர்லாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஒருவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள தனது அடுக்குமாடி வீட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர். 

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘ஃபர்ஸ் லுக்அவுட் மார்க்கெட்டிங்’ நிறுவனத்தில் 50 வயது திரு ப்ரையன் பேட்ரிக் ஓ’ரைலி வேலை செய்து வந்ததாக ‘த ஸ்டார்’ செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

உயிரிழந்த திரு ஓ’ரைலி, பானை ஒன்றால் அடிக்கப்பட்ட பின்னர் வயிற்றிலும் கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டதாக போலிசார் ஊகிக்கின்றனர். வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்ட அவரது சடலத்திற்கு அருகே கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்தக் கொலை தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.