ஆற்றில் வீசப்பட்ட ரசாயனக் கழிவு: ஜோகூரில் மூவர் கைது

ஜோகூர் பாரு:  மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவு வீசப்பட்டது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த ரசாயனக் கழிவு ஆற்றில் வீசப்பட்டதை அடுத்து ஜோகூரில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏறத்தாழ 79 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜோகூரின் சுற்றுப்புறத் துறை அதிகாரிகளும் போலிசாரும் இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கூலாய் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாசிர் பூத்தேவில் உள்ள கழிவுப்பொருள் தொழிற்சாலையின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்குள் அதிகாரிகள் நுழைந்தபோது கறுப்பு நிறத்தில் இருக்கும் ரசாயனம் வீசுவதற்காகப் பொட்டலம் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாக அறியப்படுகிறது. 
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.