மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

கொசோவிலிருந்து சுவிட்சர்லாந்துக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ‘ஏஎல்கே ஏர்லைன்ஸ்’ விமானம் மோசமான வானிலையால் ஆகாயத்தில் கட்டுப்பாட்டைத் தாண்டி குலுங்கத் தொடங்கியது. 

அதனால் விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. 

விமானம் குலுங்கியபோது அந்த போயிங் 737-300 ரக விமானத்தின் 31 வயது பயணி மிர்ஜெடா பா‌‌‌ஷா பதிவுசெய்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 

கட்டுப்பாட்டை மீறி விமானம் குலுங்கியதால் விமான சிப்பந்தியும் உணவு தள்ளுவண்டியும் விமானத்தின் கூரைக்கு எறியப்பட்ட காட்சி அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. 

உணவுத் தள்ளுவண்டியிலிருந்து வெளியேறிய தண்ணீரால் நனைந்த நிலையில் பயணி ஒருவர் பிரார்த்தனை செய்வதுபோன்ற காட்சி காணொளியின் இறுதியில் உள்ளது. 

சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் தரையிறங்குவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னர் 121 பேரை ஏற்றிச்சென்ற விமானம் இந்த இயற்கை இடரை எதிர்நோக்கியது. 

பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானத்திலிருந்து 10 பயணிகள் சாதாரண காயங்கள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். 

உணவுத் தள்ளுவண்டியிலிருந்து வெளியான சூடான தண்ணீர் ஒருசிலர் மீது கொட்டியதால் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவத்தின்போது மற்ற விமான ஊழியர்கள் அமைதி காத்ததாகப் பயணிகள் தெரிவித்தனர்.