இலங்கையைச் சேர்ந்த 13 அகதிகளைக் கொண்ட படகு ஒன்றை ஆஸ்திரேலிய ராணுவத்தினர் இடைமறித்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார். அடைக்கலம் நாடி வந்த தமிழ்க்குடும்பம் ஒன்றைக் கண்காணாத தடுப்புக்காவல் நிலையத்திற்கு மாற்றும் முடிவை அந்நாட்டின் அதிகாரிகள் தற்காத்துப் பேசும் வேளையில் இந்தத் தகவல் வெளிவந்தது.
கோகோஸ் தீவுக்கு அருகே இடைமறிக்கப்பட்ட அந்தப் படகு, கடந்த 18 மாதங்களில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற 13ஆவது படகு என திரு டட்டன் கூறியதாக 'கொரிய-மெயில்' செய்தித்தாள் குறிப்பிட்டது.
"இவ்வாறு படகுகள் இங்கு வருவதை நாம் நிறுத்தவேண்டும். இதற்காகத்தான் எங்களது தேர்தலுக்குப் பிறகு நான் பயணம் செய்த முதல் நாடு இலங்கையாக இருந்தது," என்று அவர் கூறினார். இவ்வாண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தேசியவாதக் கொள்கைகளைக் கொண்ட ஆஸ்திரேலியக் கட்சி வென்றது.
ஆஸ்திரேலியாவின் குடிநுழைவுச் சட்டத்தின்படி, அகதிகள் நடுக்கடலில் இடைமறிக்கப்பட்டால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஆனால் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் பாபுவா நியூ கினி மற்றும் நவுருவிலுள்ள தடுப்புக்காவல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.
சம்பந்தப்பட்ட தமிழ்க்குடும்பம் 'கிறிஸ்மஸ்' தீவுக்கு அனுப்பப்பட்டதை எதிர்த்து கடந்த வாரயிறுதியின்போது ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆயினும், அக்குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவிலேயே தங்க அனுமதித்தால் அது வேறு பலரை அகதிகளாக நுழைய ஊக்குவிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
பிரியா, நடேசலிங்கம் என்ற இருவர் முறையே 2012ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவை அடைந்தனர். அகதிகளைத் தூரத்துத் தீவுகளில் தடுத்துவைக்கும் வழக்கத்திற்கு முன்பாக ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்த அவ்விருவரும், தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் தங்கி வந்தனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தக் குடும்பம் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று திரு டட்டன் முடிவாகக் கூறிவிட்டார்.

