'மனிதமுகம்' கொண்ட மீன்

சீனாவின் யுனான் மாகாணத் தலைநகர் குன்மிங் அருகேயுள்ள மியோநகர் எனும் சுற்றுலாத் தளத்தில் உள்ள ஓர் ஏரியில்  மனித முகம் கொண்ட ஒரு மீன் நீந்தி வந்ததைக் கண்டு  ஒரு சுற்றுப்பயணி வெகுண்டார். சுமார் 15 விநாடிகள் தலையை உயர்த்தி ஏரியில் நீந்திய மீனை அந்தப் பெண் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். 

கெண்டை மீன் வகையைச் சேந்த அந்த மீனுக்கு மற்ற மீன்களைப்போலவே வாய், கண்கள் இருந்தாலும் அதன் தலையில் மனித முகத்தில் இருப்பதுபோன்ற கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றைப்போன்ற கருப்பு நிற அடையாளங்கள் தென்பட்டதால் அதன் முகம் பார்ப்பதற்கு மனித முகத்தைப் போன்ற தோற்றத்தை அளித்தது.

பிரிட்டனிலும் தைவானிலும் மனித முகம் கொண்ட மீன்கள் இதற்கு முன்பு தென்பட்டுள்ளன. ஆனால் அவற்றைவிட மியோநகர் குளத்தில் நீந்திய மீன் அச்சு அசலாக மனித முகத்தைப்போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஓர் அரிய உயிரினமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.