ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து

உலகப் பிரசித்தி பெற்ற ஆங்கோர் வாட் ஆலயத்தில்  அனைத்து விதமான யானைச் சவாரிகளையும் ரத்து செய்ய இருப்பதாக கம்போடிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யானைச் சவாரியைக் கொடூரமான செயல் என்று கூறி வரும் அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்குக் கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு இது நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அங்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர்.  கடந்த ஆண்டில் கம்போடியாவுக்குச் சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஆறு மில்லியனைத் தாண்டியது.

யானைகளை வர்த்தகத்துக்காகப் பயன்படுத்டுவது இனிமேல் ஏற்றுக்கொள்ளத் தகுந்ததல்ல என்று ஆங்கோர் ஆலய பூங்கா வளாகத்தை நிர்வகிக்கும் திரு லோங் கோசல் என்பவர் குறிப்பிட்டார். சில யானைகள் மிகவும் வயதானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆலயத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சமூகக் காட்டுக்கு  இதுவரை 14 யானைகள் அனுப்பப்பட்டுள்ளன.

காட்டுக்குள் சுதந்திரமாக வாழும் அந்த யானைகளை அவற்றின் உரிமையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். 

கடந்த 2016ஆம் ஆண்டு சுற்றுப்பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆங்கோர் வாட் ஆலத்தைச் சுற்றி வந்த பெண் யானை ஒன்று சாலையோரத்தில் சுருண்டுவிழுந்து இறந்தது. அது சுருண்டு விழுவதற்கு முன்பாக 45 நிமிடங்கள் கடும் வெயிலில் பயணிகளைச் சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity