சுடச் சுடச் செய்திகள்

வெள்ளம் அதிகரித்தாலும் மக்கள் ஊரைக் கைவிடுவதாக இல்லை

சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டபோதும் வெனிஸ் நகர மக்கள் வேறு எங்கும் செல்லாமல் தொடர்ந்து அந்நகரத்திலேயே இருக்க உறுதிபூண்டுள்ளனர்.

உணவகம் நடத்திவரும் திரு மெட்டினோ ராடோ வழக்கமாகத் திரளும் வாடிக்கையாளர் கூட்டத்தால் நாள் முழுவதும் இடைவிடாமல் வேலை இருக்கும். ஆனால் கடந்த புதன்கிழமை (நவம்பர் 13) அந்நகரில் கடல் பேரலையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அவரது ‘ஹோட்டல் சவோயா அன்ட் ஜொலாண்டா’ உணவகம் மூடியே இருந்தது. வரலாற்றில் இரண்டாவது ஆகப் பெரிய பேரலைத் தாக்குதலால் அவரது வர்த்தகத்திற்கு குறைந்தது 70,000 யூரோ பெறுமானமுள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

Property field_caption_text
(படம்: ஏஎஃப்பி)

இருந்தபோதும் தமது தாய்நகரத்தை எக்காரணம் கொண்டும்  கைவிடப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.  ‘பிரளய வெள்ளம்’ என உள்ளூர் பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்ட இந்த வெள்ளத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், சதுக்கங்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. இத்தாலிய மத்திய அரசு வெனிஸ் நகரில் அவசர நிலையைப் பிரகடனம் செய்திருக்கிறது. அத்துடன், வெள்ளச் சேதத்தைக் கையாள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் 20 மில்லியன் யூரோ உதவித்தொகையை ஒதுக்கியுள்ளது.

இன்னல்கள் எத்தனை இருந்தாலும் தங்களது நகரம் மீதுள்ள நகரவாசிகளின் அபிமானத்தை இந்த வெள்ளம் எந்த விதத்திலும் மட்டுப்படுத்தவில்லை. “இந்தக் கடலே எங்கள் உயிர், இந்த வெள்ளமும் கூட,” என்றார் ஹோட்டல் நிர்வாகி ஜேக்கோப்போ டெராய்.