புதுடெல்லி: இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர் அதிபராகியிருப்பது இந்தியாவுக்குச் சில சிக்கல்களை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர் பிரம்மா செல்லானே தெரிவித்துள்ளார்.
ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சீனாவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அந்நாட்டின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து அவர் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேயைப் பிரதமராக்குவார் என்று ஊடகங்களில் ஆரூடத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்கள் இருவருமே சீன அரசுக்கு நெருக்கமானவர்கள் என்று பிரம்மா செல்லானே கூறியுள்ளார். இதனால் இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நேப்பாளத்தில் சீனாவுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்தியா சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
“இதேபோன்று இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி மீண்டும் வந்திருப்பதும் இந்தியாவுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக கடல் சார் பாதுகாப்பில் இந்தியாவுக்குச் சிக்கல் ஏற்படலாம்,” என்று பிரம்மா செல்லானே தெரிவித்துள்ளார்.
தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இலங்கை ஏற்கெனவே இந்தியாவிடம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே இலங்கையின் இந்த எண்ணம் வெளிப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைய இந்தியாதான் காரணம் என வெளிப்படையாகக் கூறினார் ராஜபக்சே. இதனால் ராஜபக்சே சகோதரர்கள் சீனாவுடன் தொடர்ந்து நெருக்கம் பாராட்ட வாய்ப்புள்ளதாக பிரம்மா செல்லானே கூறியுள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு சென்று அதிபர் கோத்தபய ராஜபக்சேயை சந்திக்க உள்ளதாகவும், அச்சந்திப்பின்போது, இலங்கை அதிபரை இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று மோடி விடுத்துள்ள அழைப்பை தாங்கிய கடிதம் ஒன்றை ஒப்படைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.